கடலில் விழுந்தவர், எங்கோ தத்தளிக்க, இங்கே கரையில் கட்டப்பட்ட தோணியும்
அறிவு பசித்து பிள்ளை வாட, பணத்தால் வாங்கப்படும் வாணியும்
விளைச்சல் நிலங்கள் நீரின்றி வாட, வேறேங்கோ அடித்து பெய்யும் மழையும்
விரல்கள் மறந்து தாளை மீட்ட, படித்து மறந்த விடையும்
நன்னீரை உப்பாக்கும் கடலும்,
பூட்டிய வீட்டுக்கு ஓயாது வந்து சேரும் மடலும்
மறக்க சொன்னாலும், நினைத்து பார்க்கும் மனமும்,
உருகி வேண்டினாலும் வேறாய் செய்யும் கடவுளையும் போலே, நானும் கெட்டவன்.,
நான், ஒருவன் இல்லை, ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொருவன். நாங்கள் கெட்டவர்கள்.
தினமும் காலையில் உடலை கழுவி, சுட சுட சட்டை அணிவித்து அன்றைய நாடகம் நன்றாய் நடக்க என்னால் முடிந்தவரை நடித்து வாழும் நல்ல ஒரு நடிகன். கலைஞன் !
மனதில் ஒன்றும், செய்கையில் ஒன்றுமாய் இரட்டை வேட நாடகத்தில் நானும் மிக முக்கியமான பாத்திரம். முதலில், கசந்து, பிறகு சகஜமாகி போன ஒரு நுணுக்கம்.
நினைத்து பார்க்க கூடாது என்றவற்றை நினைத்து பார்க்க..
செய்ய கூடாதவற்றை செய்து பார்க்க.. தவறியதில்லை.
ஆனால் யோசித்து பார்க்கிறேன். நான் முழுவதும் கெட்டவனா ? என்று. இல்லை.
திடகாத்திரமான உடல் கொண்ட, பிச்சையையே முழு நேர தொழிலாய் கொண்டவர்களுக்கு பிச்சை அளித்திருக்கிறேன்.
பொதுவிடத்தில் அநியாயமாக, ரகளை செய்பவரிடம் எந்த சண்டையும் போடாமல் ஒதுங்கி வந்திருக்கிறேன்.
தகுதி இல்லாதவர்களுக்கு பாராட்டும், மதிப்பும் கிடைக்கும் பொது கூட்டத்தில் இருந்து கொண்டு கை தட்டி இருக்கிறேன்..
மனிதனாய் இருந்து கொண்டு, ஒரு மரம் போலே,
மற்றவர்களில்.. முக்கியமாக மிகவும் பிடித்த நெருக்கமானவர்களின் வாழ்க்கை கேள்வி குறியாவதை எந்த தலையீடும் இல்லமால் பார்த்து சகித்து கொண்டு இருக்கிறேன்.
படித்த நல்லொழுக்கங்களை காகிதத்தில் மட்டுமே எழுதி மதிப்பெண் பெற்று இருக்கிறேன்.
சில சமயம் மனதளவில் மற்றவர்களுக்காக வருந்தியும் மகிழ்ந்தும் நிறைந்திருக்கிறேன். அதை அவர்களுக்கு புரிய வைக்க எந்த நடவடிக்கையிம் எடுக்காமல் இருந்திருக்கிறேன் ஆனாலும்..
எதிர்காலத்தில் அனைவரும் புகழ, பாராட்ட, வியந்து முன்னோடியாய் பார்க்க போகும் மனிதன் என்ற கர்வத்தில் இன்றைய பொழுதை எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் படிக்கட்டுக்களாய் செதுக்கி கொண்டிருக்கும் நானும், உன்னை போல...
கெட்டவன்.